2013ம் ஆண்டிற்கான நோர்வே திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

சிறந்த படமாக வழக்கு எண் 18/9 படம் தேர்வாகியுள்ளது. நோர்வே திரைப்பட விழாவில் உலகம் முழுவதும் தயாரான 15 தமிழ் திரைப்படங்களைத் தேர்வு செய்து, அதில் பணியாற்றிய கல…ைஞர்கள், தயாரித்த தயாரிப்பாளர்களைக் கவுரவிப்பது வழக்கம்.

இந்த ஆண்டு ஏப்ரல் 24 முதல் 28 வரை நார்வே தலைநகர் ஆஸ்லோ மற்றும் ஜெர்மனி தலைநகர் பெர்லினில் இந்த விழா நடைபெற்றது. இந்த விழாவில் விருது பெற்ற திரைப்படங்கள் மற்றும் நட்சத்திரங்களின் விபரங்கள்: நடிகர் விக்ரம், நடிகர் சூர்யா ஆகியோருக்கு கலைச்சிகரம் விருது வழங்கப்பட்டது.

திருப்பதி பிரதர்ஸ் தயாரித்த வழக்கு எண் 18/9 சிறந்த திரைப்படமாக தேர்வானது. கும்கி படத்தை இயக்கிய பிரபு சாலமன் சிறந்த இயக்குநர் விருதினைப் பெற்றார். நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம் படத்தின் நாயகன் விஜய் சேதுபதி சிறந்த நடிகருக்கான விருதினைப் பெற்றார். சிறந்த நடிகைக்கான விருது கும்கி படத்தில் நடித்த லட்சுமி மேனனுக்கு கிடைத்தது. கும்கி படத்தில் இசை அமைத்த டி.இமானுக்கு சிறந்த இசை அமைப்பாளர் விருது வழங்கப்பட்டது.

இயக்குநர் மணிவண்ணனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. தென்னிந்திய நடிகர் சங்கத்தலைவர் சரத்குமாருக்கு ஐகான் ஆப் தி தமிழ் சினிமா விருது வழங்கப்பட்டது. இந்தியா முழுவதும் மரம் நட்டு சுற்றுச்சூழலை பாதுகாக்கும் விவேக்கிற்கு சிறந்த சுற்றுச்சூழல் விழிப்புணர்வு மனிதர் விருது வழங்கப்பட்டது.

சிறந்த புதுமுக நடிகை விருது ராட்டிணம் படத்தின் நாயகி ஸ்வாதிக்கு வழங்கப்பட்டது. மக்களால் அதிகம் பாராட்டப்பட்ட படங்களாக பிரகாஷ் ராஜ் இயக்கிய தோனி படம் விருது பெற்றது. சுந்தரபாண்டியன் படம் மக்களால் அதிகம் பார்க்கப்பட்ட படமாக தேர்வு செய்யப்பட்டது.

சிறந்த சமூக விழிப்புணர்வு படமாக சாட்டை தேர்வு செய்யப்ட்டது. சிறந்த பின்னணிப் பாடகராக எஸ்.பி. பாலசுப்பிரமணியம் தேர்வு செய்யப்பட்டார். தோனி படத்தில் வரும் ‘வாங்கும் பணத்துக்கும்…. என்ற பாடலை பாடியதற்காக அந்த விருது கிடைத்தது. கும்கி படத்தில் வரும் சொய்… சொய்… பாடலைப் பாடிய மகிழினி மணிமாறனுக்கு சிறந்த பாடகிக்கான விருது கிடைத்தது.

சிறந்த புதுமுக நடிகர்கள் விருது விஜய் ஆண்டனி, உதயநிதி ஸ்டானின் ஆகியோருக்கு வழங்கப்பட்டது. சாட்டைப் படத்தில் வில்லத்தனம் செய்த தம்பி ராமைய்யாவிற்கு சிறந்த வில்லன் நடிகர் விருது கிடைத்தது. சிறந்த துணை நடிகை விருது சரண்யா பொன்வண்ணனுக்கு அளிக்கப்பட்டது. சிறந்த துணை நடிகர் விருது கும்கி படத்தில் லட்சுமி மேனன் அப்பாவாக நடித்த ஜோ மல்லூரிக்கு அளிக்கப்பட்டது.

ஒரு கல் ஒரு கண்ணாடி படத்திற்காக நடிகர் சந்தானத்திற்கு சிறந்த நகைச்சுவை நடிகர் விருது வழங்கப்பட்டது. சிறந்த பாடலாசிரியர் விருது கவிஞர். நா.முத்துக்குமாருக்கு கிடைத்தது. தோனி படத்தில் வரும் விளையாட்டா படகோட்டி… பாடலை எழுதியதற்காக இந்த விருதினைப் பெற்றார். கும்கி படத்தின் ஒளிப்பதிவாளர் சுகுமார் சிறந்த கேமரமேன் விருதினைப் பெற்றார்.

சிறந்த படத்தொகுப்பாளர் விருது நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம் படத் தொகுப்பாளர் கோவிந்தராஜூக்கு கிடைத்தது. சிறந்த ஒரிஜினல் திரைக்கதை விருது பீட்ஷா பட இயக்குநர், திரைக்கதை ஆசிரியர் கார்த்திக் சுப்புராஜூக்கு வழங்கப்பட்டது.

சிறந்த கதை ஆசிரியர் விருது நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம் பாலாஜி தரணிதரனுக்கு வழங்கப்பட்டது. நண்பன் படத்தில் ஒல்லி பெல்லி பாடலுக்கு நடனம் அமைத்த ஷோபிக்கு சிறந்த நடன அமைப்பாளர் விருது கிடைத்தது. சென்னையில் ஒருநாள், ஹரிதாஸ் ஆகிய படங்கள் 2013ம் ஆண்டின் சிறந்த படங்களாக தேர்வு செய்யப்பட்டன.