உச்சிதனை முகர்ந்தால்! – இம்மாதம் 25ஆம் திகதி வெளியாகும்

மட்டகளப்பு சிறுமி புனிதவதியின் வாழ்க்கையில் நடந்த உண்மை நிகழ்வை வைத்து உருவாக்கப்பட்ட முழு நீளத் தமிழ்த் திரைப்படமான உச்சிதனை முகர்ந்தால் வெளியாக தயாராக உள்ளது என்பது யாவரும் அறிந்ததே.
வருகிற 25 ஆம் நாள் வெளியாகும் இத்திரைப்படத்தின் சிறப்பு காட்சி இன்று சென்னையில் நடைபெறுகிறது.
இக்காட்சிக்கு தமிழ்நாட்டின் தலைவர்களான நெடுமாறன் ஐயா, திரு. வைகோ, திரு. நல்லக்கண்ணு, திரு. மகேந்திரன், திரு. கொளத்தூர் மணி, திரு. சீமான், திரு. தமிழருவி மணியன், திரு.தியாகு, திரு. மணியரசன், திரு. சு.ப.வீரபாண்டியன், திரு. வேல்முருகன், திரு. ஜவகருல்லாஹ், திரு. கிருஷ்ணசாமி உள்ளிட்டவர்கள் வருகை தர இருக்கிறார்கள்.
ஏற்கனவே நடைபெற்ற சிறப்பு காட்சியின் பொழுது தமிழச்சி தங்கப்பாண்டியன், கவிஞர் காசி ஆனந்தன், கவிஞர் சல்மா, வன்னியரசு, ஓவியர் வீரசந்தானம், வேல்முருகன், பேராசிரியர் நாகநாதன், முன்னாள் மேயர் கணேசன் ஊடகவியலாளர்கள் டி.எஸ்.எஸ். மணி, அய்யநாதன்  மற்றும் ஏகலைவன் ஆகியோர் கலந்துகொண்டதோடு புனிதவதியாக நடித்த சிறுமியின் உச்சியில் முகர்ந்து அவள் காட்டிய இயல்பான நடிப்பை  மெய் சிலிர்த்து பாராட்டினார்கள். அதோடு, எம் இனத்தின் பிறந்த ஒவ்வொருவரும் பார்க்க வேண்டிய படம் என்பதையும் யூத இனப்படுகொலைக்கு பிறகு ஆயிரக்கணக்கான படங்கள் வெளியானது என்றும் முள்ளிவாய்க்கால் பெரும் சோகத்திற்கு பிறகு வரும் முதல் படம் இதுவே என்றும் இப்படத்தின் வெற்றி மட்டும் இன்னும் பல ஆயிரம் படைப்புகள் வர காரணமாய் இருக்கும் என்பதையும் தெரிவித்தார்கள்.
அது மட்டும் அல்லாது உணர்ச்சி கவிஞர் காசி ஆனந்தன் அவர்கள் முதல் முறையாக தமிழ்த் திரைப்படம் ஒன்றிற்கு பாடல் எழுதியிருக்கிறார். அவரின் ‘ உச்சிதனை முகர்ந்தால்’ மற்றும் ‘இருப்பாய் தமிழாய் நெருப்பாய்’ பாடலும் தமிழக இல்லங்களிலும் அலைபேசிகளிலும் ஒழித்துக் கொண்டு இருக்கிறது என்பது சிறப்பம்சம்.
கவிஞர் கதிர்மொழி எழுதிய சுட்டிப் பெண்ணே பாடலின் காட்சி அமைப்பு அப்படியே மட்டக்களப்பை உங்கள் கண் முன்னே காட்டும் என்பதை நீங்கள் திரையில் பார்க்கு பொழுது தெரியும். அவரின் ஏனோ ஏனோ இது ஏனோ என்ற பாடல் எம் இனத்தின் சோகத்தை நாளே வரிகளில் சொல்லும் அளவிற்கு அழுத்தம் வாய்ந்தவை.
Global Media Invest As நிறுவனம் தயாரித்த இத்திரைப்படத்தை ஜெமினி வெளியிடுகிறது என்பது மிகவும் பெருமையான விடயமாகும்.
உச்சிதனை முகர்ந்தால் திரைப்படத்தின் இசை வெளியீடு லண்டன் மாநகரிலும் சென்னையிலும் நடைபெற்று மக்களின் பெரும் ஆதரவினை திரட்டி இருக்கிறது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.