“உச்சிதனை முகர்ந்தால்​” – ஈழத்தமிழர்​களுக்காக ஈழத்தமிழர்​கள் எடுத்த திரைப்படம்

நோர்வே வாழ் ஈழத்தமிழர்கள் தமிழகத் தமிழர்களுடன் இணைந்து முதன் முறையாக முழு நீளத் தமிழ்த் திரைப்படமாக ‘உச்சிதனை முகர்ந்தால்’ என்னும் திரைக்காவியத்தை தயாரித்திருப்பது யாவரும் அறிந்ததே. மட்டகளப்பில் பிறந்து வளர்ந்த புனிதவதியின் வாழ்க்கையில் நடந்தவற்றை பின்னணியாக கொண்டு  இத்திரைகாவியத்தை இயக்குனர் புகழேந்தி தங்கராஜ் அவர்கள் தீட்டியிருந்த வேளையில்தான் நோர்வே வாழ் தமிழர்கள் அவருக்கு உறுதுணையாக இருக்க முடிவு செய்து அவருடன் உழைத்து இன்று உங்கள் கண் முன்னாள் திரைப்படமாக உருவாகி நிற்கிறது.
இத்திரைப்படத்தில் புனிதாவை பார்க்கும் ஒவ்வொருவரும் அவளோடு சேர்ந்து சிரிப்பான் அவளோடு சேர்ந்து அழுவான்.
ஏற்கனவே தமிழகத்தில் வெளியாகி மக்களின் ஆதரவினைப் பெற்று நிற்கும் இத்திரைப்படம் இன்னும் ஓரிரு நாட்களில் ஐரோப்பிய நாடுகள், ஆஸ்திரேலிய, கனடா உள்ளிட்ட நாடுகளில் வெளியாக இருக்கிறது.
உச்சிதனை முகர்ந்தால் நோர்வேயில் கடந்த வாரம் திரையிடப்பட்டது. பெருமளவிலான மக்கள் திரைப்படத்தைப் பார்த்ததோடு மனதை உலுக்கிய திரைப்படம் என்றார்கள்.
எமது மக்களின் வேதனையை இதனைவிட தெளிவாக திரைப்படம் ஆக்கியிருக்க முடியாது என்றும் எமது மக்களின், எமது மண்ணின் வலியை திரைப்படமாக ஆக்க உழைத்த நோர்வே மற்றும் தமிழகத் தமிழர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள் என்றும் தெரிவித்தனர்.
இத்திரைப்படத்தில் தமிழருவி மணியன் அவர்களின் கூர்மையான வசனமும் கவிஞர் காசி ஆனந்தன் அவர்களின் உணர்ச்சியும் வீரமும் கலந்த பாடல்களும் இடம்பெற்று படத்திற்கான சிறப்பை அதிகரித்திருக்கிறது. எமது போராளிகளை பெருமைபடுத்தும் விதமாகவும் நினைவூட்டும் விதமாகவும் இத்திரைப்படத்தில் இடம்பெறும் கதாபாத்திரங்களுக்கு பேராசிரியர் நடேசன் (சத்யராஜ்), காவல் அதிகாரி சார்ல்ஸ் ஆண்டனி (சீமான்), போராளி பெண் துர்கா என பெயர் சூட்டியிருக்கிறோம்.
முள்ளிவாய்க்கால் முடிந்த சில மாதங்களில் வந்த தீபாவளி திருநாளை கொஞ்சமும் கூச்சமின்றி கொண்டாடிய தமிழக மக்களுக்கு  (ஏன், ஈழத்தமிழர்களுக்கும்தான்) அந்த தவறை உணர்த்தும் விதமாக புனிதவதியின் காட்சி ஒன்று திரைப்படத்தில் வருகிறது. அதனைப் பார்த்த தமிழகப் பெண்மணி ஒருவர், “நாமெல்லாம் அழுதுகொண்டிருந்த பொழுது கொஞ்சமும் வெட்கமின்றி இந்த தமிழினம் தீபாவளியைக் கொண்டாடியது. எங்கள் கண்ணுக்கு முன்னாலும் கண்ணுக்குத் தெரியாமலும் தமிழகத்திலும் ஈழத்திலும் எத்தனையோ புனிதவதிகள் ஆதரவின்றி நடந்துகொண்டிருந்த அந்த வேளையில் எதனையும் கவலைப்படாமல் பண்டிகைகளில் மூழ்கியிருந்த தமிழினத்தை இத்திரைப்படம் சவுக்கடி கொடுக்கிறது” என்றார்.
படம் பார்த்துவிட்டு கருத்து தெரிவித்த வைகோ அவர்கள், ” என்னுடைய நூறு மேடைகள் செய்யாத எழுச்சியை இத்திரைப்படம் கொடுக்கும்” என்றார். சீமான் அவர்கள், | ” உச்சிதனை முகர்ந்தால் திரைப்படம் மற்றுமொரு படமல்ல, அது நம் தமிழர்களின் குருதி சிந்தும் வரலாற்றின் குறியீடு என்பதை அனைத்து தமிழர்களும் உணர வேண்டும்” என்றார்.
கவிஞர் வ.ஐ.ச. ஜெயபாலன் , ” எமது ஈழத்துப் போராட்டத்தை எவ்வித சமரசமும் இன்றி அதேவேளையில் எவ்வித மிகைப்படுத்தலும் இன்றி முதன் முறையாக ஒரு திரைப்படத்தை உருவாக்கி இருக்கிறார்கள். அனைத்து தமிழீழ மக்களும் இத்திரைப்படத்தை பார்க்க வேண்டும்” என்றார்.
தமிழக முஸ்லிம் தலைவரும் நிகழ்கால சட்டமன்ற உறுப்பினருமான ஜவஹருல்லாஹ் அவர்கள், ” மனிதநேயம் உள்ளவர்கள் இத்திரைப்படத்தை பார்க்க வேண்டும். படம் பார்த்துவிட்டு வந்து பல நாட்கள் ஆகியும் புனிதவதி என்னுள் ஆக்கிரமித்து என்னை கேள்வி கேட்டுக்கொண்டே இருக்கிறாள்” என்றார்.
இறுதியாக எமக்கு கிடைத்த தகவலின்படி இந்தியாவில் இருக்கும் இலங்கைத் தூதரகம் இத்திரைப்படத்தை தோல்வியுறச் செய்ய பெரு முயற்சியில்  இறங்கியிருக்கிறது. அனைத்து தடைகளையும் இத்திரைப்படம் உடைத்து ‘உச்சிதனை முகர்ந்தால்’ எடுக்கப்பட்ட நோக்கத்தை நிறைவுச் செய்யும் என்பதை உறுதியாக கூறிக்கொள்கிறோம்.
காசி ஆனந்தன் அவர்களின் ‘இருப்பாய் தமிழா நெருப்பாய்’ பாடல் காட்சியில் ஈழத்து கலைஞன் பிரேம் கோபால் நடனமாட ஈழத்து வரைபடம் வந்து போகும் அக்காட்சிக்கு தமிழக திரையரங்கில் படம் பார்த்த அனைவரும் பலமான கைதட்டலைக் கொடுத்தபொழுது எமது சோர்வுகள் வலிகள் என அனைத்தும் மறந்து ஆனந்த கண்ணீர் விட்டோம். தமிழீழம் கனவை இத்திரைப்படம் நிச்சயம் வெற்றிப் பாதையில் கொண்டு செல்லும் என்னும் பெருமிதத்தோடு உங்கள் முன் உங்கள் ஆதரவினை வேண்டி நிற்கிறோம்.
ஒரு சில நாட்களில் திரைப்படம் மூலம் உங்களைச் சந்திக்கிறோம். தமிழர்கள் குடும்பம் குடும்பமாக இத்திரைப்படத்தைப் பார்த்து இது போல பல படைப்புகள் வர காரணமாக இருப்பீர்கள் என்ற நம்பிக்கையுடன்,
“உச்சிதனை முகர்ந்தால்” தயாரிப்பாளர்கள்.